Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புலம்பெயர்ந்தவர்கள் புதுச்சேரி வர பயணக்கட்டணத்தை அரசு ஏற்கும்: நாராயணசாமி

மே 06, 2020 03:11

புதுச்சேரி: “புலம்பெயர்ந்தவர்கள் புதுச்சேரி வருவதற்கான பயணக்கட்டணத்தை முதல்வர் நிவாரண நிதியில் இருந்து கொடுக்க தயாராக இருக்கிறோம்,” என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் நாராயணசாமி தெரிவித்ததாவது:
புதுச்சேரி மற்றும் மாஹே பகுதியில் 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஓரிரு நாட்களில் மீண்டும் கொரோனா தொற்று அறிகுறி உள்ளதா? என பரிசோதனை செய்யப்படும். தனிமைப்படுத்திய பகுதிகளான முத்தியால்பேட்டை, திருக்கனூர் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்த நிலையில் அந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டுள்ளன.

கோயம்பேட்டிலிருந்து புதுச்சேரிக்கு வந்த 160 பேரின் உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. அதே போல் பல்வேறு பகுதிகளில் இருந்து 43 பேருக்கு பரிசோதனை செய்ததிலும் கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. கொரோனா தொற்றை தடுக்க அரசின் சார்பில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

கொரோனா தொற்று பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கடலூர், விழுப்புரம் பகுதிகளில் இருந்து புதுச்சேரிக்கு வருவோரை தடுத்து நிறுத்தவும், புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க காவல்துறையினர் எல்லைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.

கொரோனா தொற்றை வெகுவாக குறைத்த பிறகு கடைகள், தொழிற்சாலைகள் திறக்கப்பட்டன. ஆனால் வெளியே கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. ஆகவே, கடைகள் திறக்கும் நேரத்தை மாற்றியமைப்பது குறித்து வணிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். எனவே, ஓரிரு நாட்களில் பரிசீலனை செய்து, எந்தெந்த கடைகளுக்கு? என்னென்ன நேரம்? கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அறிவிப்போம். மீறி வெளியே அதிகப்படியான மக்கள் நடமாட்டம் இருந்தால் கடைகள் திறப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.

மத்திய அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் ரயில் பயணம் செய்தால் 85 சதவீத பணத்தை மத்திய அரசும் கொடுப்பதாகவும், 15 சதவீத பணத்தை மாநில அரசு வழங்குவதாகவும் கூறியுள்ளது. ஆனால், வாகனங்களில் வருபவர்களுக்கு என்ன உதவி செய்யும் என்பதை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் புதுச்சேரிக்கு வர விரும்பினால் அவர்களின் கோரிக்கையை பதிவு செய்ய இணையதளம் தொடங்கியுள்ளோம்.

அதற்கான செலவுகளை முதல்வர் நிவாரண நிதியில் இருந்து கொடுக்க உத்தரவிட்டுள்ளேன். அது சம்மந்தமான நிதி பற்றி எந்தவித கவலையும் இல்லை. எனவே, புலம்பெயர்ந்தவர்கள் புதுச்சேரி வருவதற்கான பயணக்கட்டணத்தை முதல்வர் நிவாரண நிதியில் இருந்து கொடுக்க தயாராக இருக்கிறோம். கொரோனா தொற்றில் நாம் மூன்றாம் கட்டத்தை நெருங்கிவிடுவோமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆகவே, அதனை தடுத்து நிறுத்த அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்