Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுக்கடைகளைத் திறக்க எதிர்ப்பு; கருப்பு உடையணிந்து ஸ்டாலின் குடும்பத்துடன் போராட்டம்

மே 07, 2020 07:16

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு இடையே மதுக்கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கருப்பு உடையணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் இதுவரை 4,829 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் இன்று (மே 7) முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 10 மணிக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

இதனிடையே, கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என்று வலியுறுத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று காலை 10 மணி முதல் குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் வரை தமிழக அரசுக்கு எதிராக வீட்டு வாயிலில் மக்கள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என, வீடியோ வாயிலாக கேட்டுக்கொண்டார். மேலும், தமிழகத்திற்கு நிதி தராத மத்திய அரசைக் கண்டிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். வாயிலில் 5 பேருக்கு மிகாமல் நின்று போராட வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் தன் வீட்டு வாயிலில் கருப்பு உடையணிந்து, கருப்புக் கொடியேந்தி மதுக்கடைகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார். அவருடன் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

அதேபோல, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் தங்கள் இல்லங்களிலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைப்புச்செய்திகள்