Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரியில் ஊரடங்கை இனியும் நீட்டித்தால் பொருளாதாரம் முழுமையாக அழிந்துவிடும்: நாராயணசாமி

மே 07, 2020 07:29

புதுச்சேரி: மே 17-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீடித்தால் புதுச்சேரியின் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்துவிடும் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் 3 பேர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்து புதுச்சேரியில் தங்கிய வியாபாரிகளுக்கு பழங்கள் விநியோகம் செய்த தேனியைச் சேர்ந்த பழ வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது தேனியில் தெரிய வந்துள்ளது.

அவருடன் தொடர்பில் இருந்த புதுச்சேரி வியாபாரிகள் 36 பேர் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளைச் சேர்ந்த சந்தேகத்துக்கிடமான 12 பேரின் உமிழ்நீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி நீடித்தால் அதுவரை நாம் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த முடியாது.

மத்திய அரசால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 40 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போதுதான் புதுச்சேரியில் கடைகள், தொழிற்சாலைகளை திறந்துள்ளோம். மாநில வருவாய் குறைந்து, மத்திய அரசு நிதியுதவி அளிக்காத நிலையில் மே 17-க்குப் பிறகு ஊரடங்கு உத்தரவு நீடிக்கும் என்றால் மாநிலத்தின் பொருளாதாரம் முழுமையாக அழிந்துவிடும். இது சம்பந்தமாக பிரதமர் முடிவெடுப்பதற்கு முன்பாக மாநில முதல்வர்களை கலந்தாலோசிக்க வேண்டும். மத்திய அரசு பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என மண்டலங்களை அறிவிக்கும் சமயத்தில் மாநில அரசுகளின் பரிந்துரையை ஏற்று செயல்பட வேண்டும் என்றார்.

தலைப்புச்செய்திகள்