Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்து 13 பேர் பலி: கொத்து, கொத்தாக சாலையில் விழுந்த மக்கள்!

மே 07, 2020 10:26

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷ வாயு கசிந்து 13 பேர் பலியானதை அடுத்து அந்த வாயுவை சுவாசித்த 3000-க்கும் மேற்பட்டோர் நடந்து வரும் போதே மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாகப்பட்டினத்தில் தென்கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி.பாலிமர்ஸ் இந்தியா கடந்த 1997ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இங்கு பிளாஸ்டிக்குகளை உருவாக்கும் பாலிஸ்டைரின் தயார் செய்யப்படுகிறது. இந்த நிலையில் 40 நாட்கள் கொரோனா ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு நேற்று இந்த ஆலை திறக்கப்பட்டது. அப்போது பெரிய உலைகளில் இருந்து ஸ்டைரின் எனும் விஷ வாயு அதிகாலை 2.30 மணிக்கு வெளியேறியது.

இதனால் அந்த ஆலையைச் சுற்றி 3 கி.மீ. தூரம் கொண்ட மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் குழந்தை உள்பட 13 பேர் பலியாகிவிட்டனர். நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவால் பயன்படுத்தப்படாமல் ஆலை இருந்ததாலேயே இந்த காஸ் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. நீண்ட நாட்களாக 5,000 டன் கொண்ட இரு டேங்க்குகளை பயன்படுத்த முடியவில்லை. இதனால் வெப்பம் அதிகரித்து ரசாயன மாற்றம் ஏற்பட்டதால் காஸ் கசிவு உண்டானதாக ஆலை தரப்பில் கூறப்படுகிறது.

வாயு கசிவு ஏற்பட்டதும் வீட்டுக்குள் இருக்க முடியாத மக்கள் வெளியே ஓடி வந்தனர். இவர்களுக்கு கண் எரிச்சலும் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த மீட்பு படையினர் ஆம்புலன்ஸ்களை வரவழைத்து பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல குழந்தைகளை பொதுமக்கள் தூக்கிக் கொண்டு ஓடி வந்த காட்சி நெஞ்சை உருக்கியது.

அத்தோடு பெரியவர்கள் சாலைகளில் நடந்து வரும் போதே கொத்து, கொத்தாக மயங்கி கீழே விழுந்தனர். சாக்கடைகள், சந்து பொந்துகளில் எல்லாம் மக்கள் எந்த அசைவுமின்றி விழுந்து கிடந்தார்கள். குழந்தைகளை ஆம்புலன்ஸில் படுக்க வைத்து அவர்களது தந்தையும், தாயும் இதயம் இருக்கும் பகுதியில் கை வைத்து அழுத்தி மூச்சை வரவழைக்க முயற்சிக்கின்றனர். ஆம்புலன்ஸ் வாகனங்களுக்காக சாலைகளில் மக்கள் காத்திருந்தனர்.

இருசக்கர வாகனத்தில் அழைத்து வரப்பட்ட பெண், நடைமேடையில் அப்படியே சரிந்து விழுந்தார். அந்த ஆலையை சுற்றியிருக்கும் இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் முகத்தை ஈரத்துணியால் மூடுங்கள் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால் வீட்டுக்குள் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் அவர்கள் வெளியே வரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த விஷ வாயு கசிவால் இன்னும் பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்