Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதில் தாமதம்

மே 07, 2020 10:40

புதுடெல்லி: விமான ஊழியர்களின் கொரோனா பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை, தாயகம் அழைத்துவருவதில் சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற இந்தியர்களில், 4.5 லட்சம் பேர் வேலை இல்லாததால் தாயகம் திரும்ப அரசிடம் உதவி கோரியுள்ளனர். இவர்களில் முன்னுரிமை அடிப்படையில், 2 லட்சம் பேரை, சிறப்பு விமானங்கள் மூலமாக, இந்தியவிற்கு அழைத்துவர, இந்திய அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இதில் முதல்கட்டமாக, அமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா, சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து, 15 ஆயிரம் இந்தியர்கள், 60க்கும் மேற்பட்ட விமானங்களில் இந்த வாரத்தில், இந்தியாவிற்கு அழைத்துவரப்பட உள்ளனர். இதற்கான முதல் விமானம், இன்று தலைநகர் டில்லியிலிருந்து சிங்கப்பூர் புறப்படவுள்ளதாகவும், மும்பையிலிருந்து லண்டனுக்கு கிளம்பும் இரண்டாவது விமானம், நாளை காலை கிளம்பவுள்ளதாவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், விமான ஊழியர்களின் கொரோனா பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை, தாயகம் அழைத்துவருவதில் சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் இந்தியக் குடிமக்களில் சுமார் 70 சதவீதம் பேர் வளைகுடா நாடுகளில் வசிக்கின்றனர். தாயகம் அழைத்து வருவதில், அவர்களுக்கு முன்னுரிமை அளித்து, அதிக விமானங்கள் இயக்கப்படும் என, இந்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், அவர்களை அழைத்து வர, இந்திய கடற்படை கப்பல்களும் தயாராக உள்ளதாக, அதன் தளபதி கரம்பீர் சிங் மே 1ம் தேதி செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

'சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவிற்கு திரும்ப, 60,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். மிகுந்த தேவை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களை இந்தியாவிற்கு அழைத்துச் செல்ல, ஏர் இந்தியாவின் ஐந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்படும். இந்த விமானங்களில் முதல் விமானம் நாளை (மே 8ம் தேதி), சவுதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு 200 பேருடன் புறப்பட உள்ளது' என, சவுதியில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் சிறப்பு விமானங்கள் மூலம் நாடு திரும்பும் அனைவரும், தங்களது விமான கட்டணத்தை, அவர்களாகவே ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்தியா வந்த பின்னர் அவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்