Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

40 நாட்களுக்கு பிறகு பீகார் சென்ற மாணவர்கள்: பெற்றோர்கள், உறவினர்கள் மகிழ்ச்சி

மே 07, 2020 02:22

புதுச்சேரி: புதுச்சேரி கலாச்சார பரிவர்த்தனை திட்டத்தில் புதுச்சேரி வந்து ஊரடங்கால் சிக்கிய 23 மாணவ, மாணவிகள் பீகாருக்கு அரசு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவர்களைக் கண்டதும் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் 8 மாணவிகள் உள்ளிட்ட 23 பேர் நவோதயா பள்ளி கலாச்சார பரிவர்த்தனை திட்டத்தின்கீழ் கேரளம் அருகேயுள்ள புதுச்சேரி பிராந்திய மாஹே நவோதயா பள்ளிக்கு வந்திருந்தனர். மார்ச் மாதம் 21 ம் தேதியன்று தங்களது பயிற்சியை முடித்துவிட்டு பீகார் திரும்பிச் செல்ல முற்பட்டனர். அப்போது ஊரடங்கு காரணமாக, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், புதுச்சேரி காலாப்பட்டில் அமைந்துள்ள நவோதயா பள்ளியில் 23 மாணவர்களும் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், வெளிமாநிலங்களில் கல்வி கற்க, கூலி வேலைக்கு, கோயிலுக்குச் சென்று ஊரடங்கு காரணமாகச் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க மத்திய அரசு சில வழிமுறைகளைக் காட்டியது. இந்த வழிமுறைகளைப் பின்பற்றி புதுச்சேரியில் தங்கியிருந்த மாணவர்களை புதுச்சேரி அரசு இரண்டு தனி பேருந்துகள் மூலம் பீகார் மாநிலத்திற்கு அனுப்பி வைத்தது. இதனால் மாணவர்கள் உற்சாகமாக தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். மேலும் மாணவர்களுக்கு தேவையான முககவசம், கையுறை, கிருமிநாசினி, குடிநீர் உள்ளிட்டவையும் புதுச்சேரி அரசு சார்பில் வழங்கப்பட்டது. பீகார் சென்ற மாணவர்களை பெற்றோர் மற்றும் உறவினர்கள் வரவேற்றனர்.

இதேபோல் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியை அடுத்த ராயன்பாளையத்தில் மத்திய அரசின் நவோதயா வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் 9 மாணவிகள், 8 மாணவர்கள் என மொத்தம் 17 பேர் மத்திய பிரதேச மாநிலம் ரிவா மாவட்டத்தில் உள்ள நவோதயா பள்ளியில், கல்வி கற்றல் பறிமாற்றம் திட்டத்தின் கீழ் கடந்த சில மாதங்களுக்கு முன் சென்றனர். கல்வி முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் கொரோனா தொற்று பரவலை முன்னிட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், மாணவ, மாணவிகள் 17 பேரும் ஊர் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர்.

இவர்களை மீட்க மத்திய பிரதேச முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 17 மாணவ, மாணவிகளும் தனியார் பேருந்து மூலம் மத்திய பிரதேசத்தில் இருந்து காரைக்காலுக்கு வந்து சேர்ந்துள்ளனர். இவர்களை காரைக்கால் எல்லையில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர். மேலும் இந்த மாணவர்கள் அனைவரும் 14 நாட்கள் வீட்டில் தனித்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்