Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லலிதா ஜூவல்லரி கொள்ளையன் கவலைக்கிடம்?: தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு

மே 07, 2020 02:25

சென்னை: திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளையன் முருகனுக்கு உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், உயிருக்கு போராடி வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் முருகனை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உறவினர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் திருச்சி லலிதா ஜூவல்லரியில் கைவரிசையை காட்டியவன் தான் முருகன். திருவாரூர் முருகன் என்றால் ஃபேமஸ். கடைசியின் பின்புற சுவரில் விடிய, விடிய ஓட்டை போட்டு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் கொள்ளையடித்து சென்றான்.

இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் முருகனின் சொந்தக்காரர்கள் தான். முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டது. பின்னர் பெங்களூரு சிறையில் முருகனை அடைத்தனர். முருகன் சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்து நகைகளையும் போலீஸார் மீட்டனர். விசாரணையும் திருச்சி கோர்ட்டில் நடந்து வருகிறது.

முருகனுக்கு 4 மாநிலங்களில் ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகம் உட்பட கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் முருகன் நிறைய கைவரிசைகள் காட்டி உள்ளான். இதற்கு முன் புகார், வழக்குகளில் சிக்கியிருந்தால், அதில் இருந்தெல்லாம் முருகன் எளிதாக தப்பி விட்ட நிலையில், லலிதா ஜூவல்லரி கொள்ளையும், வங்கி கொள்ளையும் முருகனை வசமாக சிக்க வைத்துவிட்டது. ஆதாரங்கள் வலுவாக சிக்கி உள்ளன.

இந்நிலையில் முருகன் உயிருக்கு போராடி வருவதாக ஒரு தகவல் வந்துள்ளது. நடிகைகளுடன் கும்மாளமிட்ட முருகன் எய்ட்ஸ் நோய் வந்து, உடல் மெலிந்து, பற்கள் கொட்டி காணப்பட்டதாகவும், செங்கல்பட்டு மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்து கொண்டதாகவும் விசாணையில் தெரியவந்தது.

இப்போது, பெங்களூரு சிறையில் உள்ள முருகனுக்கு கை, கால் செயலிழந்து, உடல்நிலை மோசமாகி விட்டதாக தெரிகிறது. இது முருகனின் குடும்பத்தினரை கவலையடையச் செய்துள்ளது. தனியார் மருத்துவமனையில் முருகனுக்கு சிகிச்சை தர முடிவு செய்துள்ளனர். அதற்காக அவரை ஜாமீனில் எடுப்பதற்காக திருச்சி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த வழக்கு இன்னும் சில நாட்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.

தலைப்புச்செய்திகள்