Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சார் வேண்டாம் ராகுல் என்றே அழையுங்கள்: காங்கிரஸ் தலைவர்

மார்ச் 13, 2019 11:26

சென்னை: கலந்துரையாடலில் பங்கேற்ற கல்லூரி மாணவிகளிடம், ‘சார் என்று அழைக்க வேண்டாம், ராகுல் என்றே அழையுங்கள்’ என ராகுல் காந்தி கூறியதும் அரங்கில் சிரிப்பலை எழுந்தது.  

தமிழக தேர்தல் பிரசாரத்துக்காக இன்று சென்னை வந்த ராகுல்காந்தி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடந்த மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலக்கினார். 

எப்போதும் முகத்தில் தாடியுடன் காணப்படும் ராகுல் இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தி நடிகர் போல தாடி, மீசையை எடுத்து பளிச்சென்று காணப்பட்டார். 

எப்போதும் குர்தா உடையுடன் காட்சி அளிக்கும் ராகுல் தனது தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி இருந்தார். டீ-சர்ட், ஜீன்ஸ் அணிந்திருந்த ராகுல், மாணவிகளின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்தார். 

நிகழ்ச்சி தொடங்கியதும் மாணவி ஒருவர், ‘சார்’ என்று தனது கேள்வியை தொடுத்தார். உடனே இடைமறித்த ராகுல், “என்னை சார் என்று அழைக்க வேண்டாம். ராகுல் என்றே கூப்பிடுங்கள்” என்றார். 

இதைக்கேட்டு அந்த மாணவி சிறிது நேரம் பேசாமல் மவுனம் காத்தார். இதன் பின்னர் லேசான தயக்கத்துடனேயே ‘ஹாய் ராகுல்’ என்று கூறினார். இதை கேட்டதும் அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது. ராகுல் உள்ளிட்ட அனைவருமே மனம் விட்டு சிரித்தனர். மாணவிகள் அனைவரும் கரகோ‌ஷங்களையும் எழுப்பினார்கள். 

மாணவிகளுடனான கலந்துரையாடலின்போது ராகுலிடம் அவரை பற்றியும், அரசியல் பற்றியும் பல்வேறு கேள்விகளை மாணவிகள் எழுப்பினார்கள். இதற்கு நிதானமாக யோசித்து பதில் அளித்த ராகுல் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். 

தனது தாய் சோனியா பற்றி மாணவி ஒருவரின் கேள்விக்கு தாயிடம் இருந்து பணிவை கற்றுக் கொண்டதாக தெரிவித்தார். அதே நேரத்தில் அரசியல் தொடர்பான கேள்விகளையும் ராகுல் காந்தி மாணவிகளிடம் முன் வைத்தார். 

பணமதிப்பு நீக்க நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்கிறீர்களா? என்று மாணவி ஒருவரிடம் கேட்ட போது அவர் இல்லை என்று பதில் அளித்தார். பணமதிப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பு பற்றியும், பெரிய பணக்காரர்களுக்கு மோடி துணை போவது பற்றியும் காரசாரமாக பேசினார். 

மத்திய அரசு பற்றியும், மோடியை பற்றியும் பேசும் போது ராகுலின் முகத்தில் ஆவேசம் தெரிந்தது. அதே நேரத்தில் மாணவிகளின் கேள்விகளை புன் முறுவலுடனேயே அவர் எதிர்கொண்டார். 

இதன்மூலம் தமிழகத்தில் தான் மேற்கொண்ட முதல் பிரசாரத்தையே மாணவிகளிடம் இருந்து ராகுல் தொடங்கி உள்ளார். இது இளைஞர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது. 

தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களும் கூட்டணி கட்சியினரும் ராகுலின் இந்த பிரசார வியூகத்தால் மகிழ்ச்சி அடைந்தனர். நிச்சயமாக ராகுலின் இந்த பிரசாரம் தேர்தலில் தங்களுக்கு கைகொடுக்கும் என்றே அவர்கள் நம்புகிறார்கள்.   
 

தலைப்புச்செய்திகள்