Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளை வீட்டுக்கு அனுப்புவது ஏன்?: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

மே 09, 2020 11:26

சென்னை: “அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளை எதற்காக வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கிறோம்,” என்பது குறித்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களிடம் வீடியோ மூலமாக அமைச்சர் விஜயபாஸ்க தெரிவித்ததாவது:
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடனும், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தின் நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

ஐ.சி.எம்.ஆர். சில விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல் எதற்காக வீட்டுக்கு அனுப்பி சிகிச்சை கொடுக்கிறீர்கள்? என்று சிலர் கேட்கிறார்கள். 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் அறிகுறி இல்லாமல்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

மிக குறுகிய நபர்களுக்கு மட்டும்தான் வறட்டு இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருக்கின்றன. ஐ.சி.எம்.ஆர். பரிந்துரைப்படி கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும், அறிகுறி இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தால், அதாவது, அவருக்கு ரத்த கொதிப்பு, ஆஸ்துமா, சர்க்கரை வியாதி போன்றவை இல்லாமலும், 40 வயதுக்குட்பட்டவராக இருந்தாலும் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். தேவையென்றால் எக்ஸ்ரே எடுத்து மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வீடுகளில் வைத்து கண்காணிக்கபடுவார்கள் என்று தெரிவித்து உள்ளது.

தமிழக மருத்துவமனைகளில் 29,000 படுக்கை வசதிகள் உள்ளன. மருத்துவமனைகளில் படுக்கை வசதி அதிகரிப்பதற்கு தேவைப்படும் நிதி வசதியை முதல்வர் வழங்கியுள்ளார். எனவே, மருத்துவமனையில் இடமில்லாமல் வீட்டுக்கு அனுப்புவதாக கூறப்படுவது தவறு. நோயாளிகளை வீட்டுக்கு அனுப்பினால் கூட தனியறை இருக்கிறதா?, அதற்குள் கழிவறை இருக்கிறதா?, சமூக இடைவெளியை வீட்டில் பராமரித்து கொள்வதற்கு தேவையான இடவசதி இருக்கிறதா? என்பதையெல்லாம் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் உறுதி செய்த பிறகுதான் நோயாளிகளை விட்டு கண்காணிப்பில் வைத்திருக்க அனுமதிக்கிறோம்.

மத்திய அரசு வழிகாட்டுதல் இப்படித்தான் இருக்கிறது. இதன்படி தமிழக அரசு செயல்படுகிறது. இதை தவிர கூடுதலாக தமிழக அரசு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. வீட்டுக்கு செல்வோருக்கு ஒரு கிட் வழங்கப்படுகிறது. அதில் என்ன செய்ய வேண்டும்?, என்ன செய்யக்கூடாது?, உடன் இருப்போர் எவ்வாறு தங்களை பராமரித்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றிய குறிப்பு, எந்த மாதிரி உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது பற்றிய டயட் சார்ட் ஆகியவை அடங்கிய கையேடு கொடுத்து அனுப்பப்படுகிறது. வைட்டமின் சி மற்றும் டி கொண்ட மாத்திரைகளை கொடுக்கிறோம். மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை செய்த கபசுர குடிநீர் பொட்டலத்தையும், நிலவேம்பு குடிநீர் பொட்டலம், ஹேண்ட் சானிட்டைசர், சோப்பு ஆகியவை அடங்கிய உபகரணத்தை நோயாளிகளுக்குக் கொடுத்துதான் வீட்டிற்கு அனுப்புகிறோம்.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்