Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம் வரும்: ராகுல் காந்தி

மார்ச் 13, 2019 11:30

சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம் வரும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று காலை சென்னை வந்தார். 

விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

விமான நிலையத்தில் இருந்து நேராக போயஸ் கார்டனில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் பெண்கள் கல்லூரிக்கு சென்றார். அங்கு மாணவிகள் மத்தியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஜீன்ஸ்பேண்ட், டி-சர்ட்டுடன் இளமை தோற்றத்தில் வந்த ராகுல்காந்தி மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியுடன் உரையாடினார். “சேஞ்ச் மேக்கர்ஸ்” என்ற தலைப்பில் மாணவிகள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து ராகுல் கூறியதாவது:- 

இந்தியாவில் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் குறைந்த அளவிலேயே செலவிடுகிறது. 

நிதி ஒதுக்குவது மட்டுமல்லாமல் அந்த நிறுவனங்களை சுதந்திரமாக இயங்க அனுமதிக்க வேண்டும். சவால்களை மேற்கொள்ளும் வகையில் கல்வி தரம் உயர வேண்டும். 

வட இந்தியாவை விட தமிழ்நாடு உள்பட தென் இந்தியாவில் பெண்களை சிறப்பாக நடத்துகிறார்கள். 

பெண்கள் இரண்டாம் நிலை என்று கருத வேண்டாம். சமநிலை என்றே கருத வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் கொண்டு வரப்படும். அது ஒரே வரியாக இருக்கும். அதுவும் குறைந்த வரியாக இருக்கும். 

பா.ஜனதா கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரியால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

நிரவ் மோடிக்கு மத்திய அரசு ரூ.35 ஆயிரம் கோடியை கடனாக வழங்கியது. அவர் எத்தனை பேருக்கு வேலை தந்தார். நிரவ் மோடி, விஜய் மல்லையா, முகுல் சோக்ஷி மக்கள் பணத்தை திருடி விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர். 

குறிப்பிட்ட சிலரை மட்டும் (ராபர்ட் வதேரா) விசாரணை வளையத்துக்கு கொண்டு வருவது ஏன்? யார் மீது வேண்டுமானாலும் விசாரணை நடத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது. 

அனில் அம்பானியின் நிறுவனம் விமானங்களை தயாரித்தது கிடையாது. எந்த அடிப்படையில் எச்.சி.எல். நிறுவனத்துக்கு ரபேல் விமான ஒப்பந்தம் மறுக்கப்பட்டு அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. 

எனவே ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடியை விசாரிக்க வேண்டும். 

காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் கொள்கை தவறாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பயங்கரவாத தாக்குதல் குறைவாக இருந்தது. 

புல்வாமா தாக்குதலை தடுக்க அரசு தவறி விட்டது. இந்த தாக்குதலை பாகிஸ்தான் தான் நடத்தியது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அந்த தாக்குதலை முன் கூட்டியே தடுக்காதது ஏன்? 

காஷ்மீர் இளைஞர்களை மற்ற இளைஞர்களுடன் பழக வைப்பதன் மூலம் பயங்கரவாதத்தை குறைக்க முடியும். காங்கிரஸ் ஆட்சியின்போது காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. சுயஉதவி குழுக்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. 

காஷ்மீரில் இந்திய பிரதமரை நேசிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டாலும் காஷ்மீர் மக்களை நேசிக்கவும் வேண்டும். 

பஞ்சாயத்து ராஜ் மூலம் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடத்தினோம். அங்கு மக்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் பயங்கரவாதத்தை தடுக்க முடியும். 

நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் தடையாக உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால் நிர்வாகத்தில் தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். எனது தாயார் சோனியா காந்தியிடம் இருந்து நான் அனைத்தும் கற்றுக் கொண்டேன். 

காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து மாநிலங்களுக்கும் சம முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஒரு மாநில மக்கள் மற்ற மாநில மக்களை நினைத்து சண்டை போடக் கூடாது. 
இவ்வாறு அவர் கூறினார். 

தலைப்புச்செய்திகள்