Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேற்கு வங்கத்தை பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்: பாஜக

மார்ச் 13, 2019 11:36

புதுடெல்லி: பாஜக மத்திய மந்திரிகள் ரவி சங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன் ஆகியோர் கொண்ட பாஜக குழு, மத்திய தேர்தல் ஆணையரை இன்று காலை சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது: 

மேற்கு வங்கத்தை மிகவும் பதற்றம் நிறைந்த தேர்தல் களமாக அறிவிக்க வேண்டும் எனவும், அனைத்து பூத்களிலும் மத்திய பாதுகாப்புப் படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளோம்.  

சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த  கிராம பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் 100 பேர் பலியாகினர். இதுபோன்ற விபரீதங்களை தவிர்க்க இந்த நடவடிக்கை தேவை. ஊடங்கங்கள் தேர்தல் நேரத்தில் சுதந்திரமாக செயல்படுவது மேற்கு வங்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஊடகங்களின் சுதந்திரம் ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.  

1986ம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி பள்ளிகள்,  கோவில்கள் அருகே பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது என திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தடுக்கிறார்கள். இது மிகவும் தவறான மற்றும் வருந்தத்தக்க செயலாகும். மேற்கு வங்கத்தில் பல்வேறு கலவரங்கள் நடத்தப்பட்டுள்ளன. எனவே பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும். 

பாராளுமன்ற தேர்தல்  ஜனநாயகத்தின் எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடியது. இந்த தேர்தல் முறைப்படி எவ்வித பாரபட்சமும் இன்றி நடைபெறும் என நம்புகிறேன். 
இவ்வாறு அவர் கூறினார்.  

இந்த பேட்டியின்போது, மேற்கு வங்கத்தின் பாஜக பொறுப்பாளர்கள் பூபேந்திரா யாதவ், கைலாஷ் விஜயவர்கயா ஆகியோர் உடனிருந்தனர். 
 

தலைப்புச்செய்திகள்