Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனிமனித சுத்தத்தை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன் அட்வைஸ்

மே 10, 2020 10:19

சென்னை: “தனிமனித சுத்தத்தை இனி ஒவ்வொருவரும் கட்டாயம் கடைபிடித்தால் மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்,” என்று கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
கொரோனா சிறப்பு அதிகாரியாக முதல்வர் நியமித்த பின்னர், ஹாட்ஸ்பாட் பகுதிகளான திரு.வி.க. நகர், ராயபுரம், அண்ணா நகர், வளசரவாக்கம், தேனாம்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கிறேன். 15 விழுக்காடு பேர் முகக்கவசம், கைகழுவுதல் உள்ளிட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்திய வழிமுறைகளை பின்பற்றவில்லை என்பது எங்களுக்கு தெரிய வந்தது. இப்போது அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு சுகாதாரத்தின் அவசியம் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் கொரோனாவால் தமிழகத்தில் இனி உயிரிழப்புகள் ஏற்படக் கூடாது என்பதில் அரசு மிக உறுதியாக உள்ளது. ஆகையால், நான் உட்பட அனைத்து அதிகாரிகளும் கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தை பூஜ்யம் என்ற நிலைக்கு கொண்டு வருவதற்காக தான் முயற்சித்து வருகிறோம்.

மக்கள் அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை. தேவையின்றி கொரோனா பற்றி குழப்பிக்கொள்ளவும், பீதியடையவும் வேண்டாம். சுகாதார விவகாரத்தில் அலட்சியமாக இல்லாமல் விழிப்புணர்வுடன் இருந்தாலே இந்த கொரோனாவை விரட்டி அடிக்க முடியும். நான் உங்கள் வாயிலாக மக்களை கெஞ்சி கேட்டுக்கொள்வது என்னவென்றால், தயவு செய்து முகக்கவசம் அணியாமல் பொதுவிடங்களுக்கு வராதீர்கள். இதே போல் வெளியில் இருந்து வீடுகளுக்கு சென்றால் கைகளை சோப்பு அல்லது சானிடைஸர் போட்டு கழுவுங்கள். இதை முறையாக பின்பற்றினாலே தொற்றை வெகுவாக குறைக்க முடியும். இதை எனது கோரிக்கையாகவே மக்களுக்கு முன்வைக்கிறேன்.

நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். கொரோனா பாசிட்டிவ் உள்ள அனைவரையும் இவ்வாறு வீடுகளுக்கு சென்றுவிடுங்கள் என அனுப்புவதில்லை. அறிகுறியே இல்லை என்றால் கூட குறைந்தது 3 நாட்கள் மருத்துவமனையில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு எக்ஸ்‌ரே உள்ளிட்ட சோதனைகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டு உரிய வழிகாட்டுதலை மருத்துவர்கள் குழு அளித்த பின்னரே வீடுகளில் தங்கி சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகிறது. அதுவும் நோயாளிகளின் விருப்பத்தின் அடிப்படையில், வீட்டில் காற்றோட்டமிக்க வசதி இல்லை. கவனித்துக்கொள்ள ஆட்கள் இல்லை என்றால் அந்த நோயாளிகள் மருத்துவமனைகளிலேயே தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், மத்திய அரசின் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ நிபுணர்கள் அளித்த பரிந்துரை மற்றும் அறிவுறுத்தல் படி தான் மருத்துவ முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

கண்டெயின்மெண்ட் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தன்னார்வலர்களை ஈடுபடுத்தி வருகிறோம். இதற்கு தீர்வு காணும் வகையில், ஒரு தெருவில் கொரோனா பாசிட்டிவ் உள்ள நோயாளி வீடு இருக்கிறது என்றால் அந்த கட்டிடத்தை மட்டும் பிளாக் செய்துவிட்டு தெருவை திறந்து விடுவது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் குழுவிடம் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பரவவில்லை. கொரோனா தொற்றுடைய சிலரால் கோயம்பேடு சந்தையில் இருந்தவர்களுக்கு கொரோனா பரவியது.  கொரோனா தொற்று இருப்பது தெரியாமல் யாரோ அங்கு சென்றிருக்கலாம். அவர்கள் மூலம் மொத்தமாக பரவியிருக்கலாம். இதற்கு கோயம்பேடு சந்தையால் பரவுகிறது எனக் கூறக்கூடாது.

மும்பை வாஸி மார்க்கெட் போன்ற உலகளவில் பெரியளவிலான மார்க்கெட்களில் இது போன்று ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நான் சிறப்பு அதிகாரியாக பொறுப்பேற்ற பின்னர் கோயம்பேடு சந்தையில் நேரடியாக தொடர்புடைய அனைவரையும் தேடி தேடி கண்டறிந்து சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறேன். அதிக எண்ணிக்கையில் சோதனைகள் நடக்கும் போது முடிவுகளும் அதிகளவில் இருக்கத்தான் செய்யும். உடனடியாக இதைப்பார்த்து பீதி கொள்ளக்கூடாது.

சென்னை மக்கள் என்றில்லை தமிழக மக்கள் அனைவருக்குமே நான் கூற விரும்புவது, தயவு செய்து உங்கள் வீட்டில் 60 வயதுக்கு மேல் இருப்பவர்களை வெளியிடங்களுக்கு அனுப்பாதீர்கள். அதேபோல் ஏற்கனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்குரிய மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்ளுங்கள். கொரொனா நம்மை என்ன செய்துவிடும் என்ற அலட்சியம் யாருக்கும் வேண்டாம். தனிமனித சுத்தத்தை இனி ஒவ்வொருவரும் கட்டாயம் கடைபிடித்தால் மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். இதை அறிவுரையாக கூறவில்லை எனது வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.

தலைப்புச்செய்திகள்